N . ஶ்ரீராம் இலக்கிய உலகம்
N. ஶ்ரீராம் - எழுத்தாளர் படைப்புலகம்
N. ஶ்ரீராமின் மாயதீதம் குறுநாவல் புது வாசிப்பு அனுபவம் அளித்தது. அதில் வரும் பல தொன்மம் சார்ந்த நிகழ்வுகள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அதை வாசித்த முடித்த பின், N. ஶ்ரீராம் நிலம்/மண் சார்ந்த அழகியல் மற்றும் கிராம மக்களின் மண் சார்ந்த வாழ்க்கை முன்வைபவர் என்னும் எண்ணம் ஆசிரியரின் மீது எழுந்தது. பர்சனாலிட்டி ஆக கூற வேண்டுமென்றால், கிராமம் சார்ந்த மனிதர் என அடையாளப்படுத்த வழிவகுத்தது மாயதீதம்.
இவை யாவையும் உடைக்கும் நாவல், அத்தி மரச்சாலை,.ஶ்ரீராமின் கிராம வாழ்க்கை அனுபவங்களும், தொலைக்காட்சி ஊடக துறையில் அனுபவங்களும் ஒன்று சேர்ந்து இருவேறு உலகை ஒன்று சேர்கிறது, இந்த நாவல்.
உதரணமாக, நீங்கள் வட சென்னையில் பழிக்காக ஒரு கொலை நடந்தது என செய்தி படிக்கிறீர்கள். தன்னிச்சையாக, கொலையாளி அதே வடசென்னையை சார்ந்தவன் என நீங்கள் எண்ண விளையும். ஆனால், இந்த நாவலில் வரும் கொலையாளி, கொங்கு பகுதியில் பிறந்து, கிராம சூழலில் வளர்ந்து , குடும்ப சந்தர்பங்களால் சென்னை வந்து, ஒரு கொலையாளியாக மாறுகிறான். அவன் வாழ்க்கை அங்கிருந்து எங்கு நகர்கிறது என்பதே நாவல்.
கண்மணி குணசேகரனின் ' அஞ்சலை ' நாவலில் வரும் நாயகி, வாழ்க்கை முழுக்க அலைகழிக்கப்படுகிறாள், வாழ்க்கையின் பிற்பகுதியில் மற்றவர்களை கடந்து, தனது பெண் குழந்தையின் மூலம் ஒரு புரிதல் அடைந்து, மறுவாழ்வு அடைகிறாள். அத்தி மரத்துச்சாலை நாவலில் வரும் தாயிற்கு அந்த கொடுப்பினை இல்லை. அவளை சுற்றியுள்ள ஆண்கள் அவளை நிராகதியாகியாக விட்டால் கூட, நிம்மதி அடைந்திற்பாள். அதற்கும் வழி இல்லாமல், அவளை பல்வேறு நடைமுறை சிக்கல்களில் மாட்டிவிட்டு நகர்ந்து கொள்கிறார்கள். ஏன் ஒரு பெண் , இயலாமை மட்டுமே கொண்ட ஆண்களுடன் சிக்கி கொள்ள வேண்டும் என பரிதாபம் எழுகிறது. கதையின் விவரிப்பு, அவளின் மகனை சுற்றியே இருந்தாலும், அவனிடம் வாசகர் புரிந்து கொள்ள ஏதுமில்லை. அவன் வெறும் இயலாமை கொண்ட , வீட்டின் முன் மிதிபடும் கால்மிதி. வாசகராக, தாயும் - மகனும் வாழ்வில் அலைகடிக்க படுவதை , தனது வாழ்க்கை மீது தனக்கே ஒரு பிடி இல்லாமல் நகரும் சிக்கல்களை , நல்ல விவரிப்பு தன்மையோடு வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.
N. ஶ்ரீராமியின் படைப்பு உலகம் சுற்றுச்சூழலில் உள்ள அழகியலை, மனிதர்களை நிறைத்து அவர்களை கதையோடு நகர்த்துகிறார். உதாரணமாக, நாயகனின் பால்யத்தில் , அந்த கிராமத்தில், பல மனிதர்களை அவர்களின் தொழிலோடு சேர்த்து அறிமுகப்படுகிறார். வாத்து காரன், வண்டிக்காரன், தார் சாலை போடுபவர்கள், என.. இது கிராம வாழ்க்கையில் தவிர்க்க இயலாதது, அனைவரும் விவசாயிகளாகவே மட்டுமே காட்டாமல், கிராமத்தின் அடுத்த அடுக்குகளையும் காட்டுகிறது இந்த நாவல். கதை முழுக்க பல மரங்கள், செடிகள், நாய்கள், என விவரணைகள் ஏராளம், அதற்கு இந்த நாவல் பெயரே சாட்சி. இது ஶ்ரீராமின் தனித்துவம் என்பது இலக்கிய உலகம் அறிந்தது. அவரது புத்தகங்களை படித்து விட்டு, இப்போது சென்னைவாசியாக வாழும் ஶ்ரீராம் அவர்களை சந்தித்தால், இவரா இயற்கை வாழ்வை இவ்வளவு சித்தர்புகளுடன் எழுதுகிறார் எனும் ஐயம் வராமல் இருக்காது.
அவரை சந்தித்து உரையாடியபோது, கேள்வி பதில்கள் தொகுத்துள்ளேன்:
(உரையாடல்களை கேள்வி பதில்களாக மாற்றியுள்ளேன், பதில்கள் ஶ்ரீராமியின் நேரடி எழுத்து பதில் அல்ல)
1. நீங்கள் உங்கள் இருபதுகளில் தொழில் நிமித்தமாக சென்னை வந்துவிட்டீர்கள், இருந்தும் கிராம சித்தரிப்புகள், மண் சார்ந்த அழகியல்களும் எழுத்தில் கைகூடுவது எப்படி?
ஶ்ரீராம் : கொங்கு பகுதியில் விவசாய குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயது முதல் வாழ்க்கை கிராம மனிதர்கள் சார்ந்து இருந்தது. குறிப்பிடும்படியாக, சில குடும்ப சூழ்நிலைகளால், நான்கு வருடங்கள் கிராமத்தில் தங்கி சில பொறுப்புகளை ஏற்கும் போது, கிராமத்தை பற்றிய விரிந்த அனுபவமும், இயற்கை ஒட்டிய வாழ்வும் அமைந்தது.
2. நீங்கள் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து, இயக்கி உள்ளீர்கள். அதன் அனுபவம் உங்கள் எழுத்தில் உதவியுள்ளதா?
ஶ்ரீராம் : இன்று cult அந்தஸ்து பெற்றிருக்கும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்களில் நான் முக்கிய பணி ஆற்றியிருக்கிறேன். அதன் தொடக்கத்திற்கு சுழி போட்டிருக்கிறேன். நிகழ்ச்சியின் கருவிற்காக, பல பயணங்கள், பல்வேறு சமூக அடுக்குகளில் வாழும் மனிதர்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை குறிப்புகளாகியுள்ளேன். அத்திமர சாலையின் கரு கூட, குற்ற பின்னணி உள்ள ஒரு இளைஞனின் தாயை தொழிற்சாலை ஒன்றில் சந்தித்து உரையாடும் போது , அவள் கூறிய நிகழ்வுகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கமே இந்த நாவல். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று , மக்களை சந்தித்து புது அனுபவங்களை பெற , எனது பணி சூழல் உதவியது என சொல்லலாம்.
3. உங்கள் சென்னை வாழ்க்கை, கிராமத்து வாழ்வின் நினைவுகளை இன்னும் பெருக்கி, எழுத்தின் மூலமாக வெளிப்படுகிறதா?
ஶ்ரீராம் : தனது கிராமத்தை விட்டு வெளியேறி, நகரத்தில் குடிபெயரும் இளைஞர்கள் , தனது கிராம வாழ்வின் நினைவுகளை எண்ணி எண்ணி எப்போதும் மீட்டு கொண்டே இருப்பார்கள். பெருநகரம் வந்த பின்பே, தான் பின்விட்டு வந்த வாழ்வின் ஏக்கத்தை உணர்வார்கள். இது எனக்கும் பொருந்தும்.
நான் இன்னும் எனது கிராமத்துடன் தொடர்பில் உள்ளேன், அடிக்கடி அங்கு பயணப்பட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவது உண்டு.
4. மாயதீதம் - புகழ்பெற்ற உங்கள் குறுநாவல். இளம் வாசகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதே சமயம், விரித்த எழுதிற்க கூடிய நாவல் என கருத்தும் நிலவுகிறது.
ஶ்ரீராம் - மாயதீதம், நான் தொன்மம் சார்ந்து , மாய எதார்த்தம் கொண்டு எழுதிய புது முயற்சி. இந்த உள்ளடகமே , நாவலின் வெற்றிக்கு காரணம். அது தன்னிச்சையாக உருவாகி வந்த படைப்பு, பெரிய நாவலாக வெளியிடவே திட்டமிட்டேன். ஆனால், நான் முதலில் எழுதிய வெர்ஷன் என் மனதிற்கு உகந்ததாக தோன்றியதால், அதையே பதிப்பிற்கு அளித்தேன்.
மாயதீததில் குறிப்பிட பட்டிருக்கும் கண் நோய் தீர்க்கும் கோவில், எங்கள் ஊரில் உள்ள கோவில்தான். இன்றும் அந்த நம்பிக்கையும் வழிபாடும் நடைபெறுகிறது.
5. உங்கள் எழுத்தில், இரவில் வரும் சித்தரிப்புகள் அதிகம். அதுவே, உங்கள் ' இரவோடி ' நாவல் எழுத வழிவகுத்ததா?
கிராமத்தில் வளர்ந்தபோது, நீர் பாசன வேலைகளுக்காக, இரவில் தோட்டங்களில் சுற்றுவது இயல்பாக இருந்தது. அந்த அனுபவங்கள், இரவின் பயத்தை போக்கியது. இரவின் அழகை நிதானமாக பார்க்கவுதவியது.
நான் பெரிய நாவல் ஒன்று முயற்சிக்க வேண்டும் என மனதில் இருந்த எண்ணம் இரவோடியாக கைகூடியது. இரவோடி என்றால் இரவில் ஓடுபவன் என பொருள் கூறலாம். இரவோடி என்னும் பெயர் கூட புதிது. ஐநூறு பக்கங்கள் இருந்தாலும், மக்கள் தொடந்து இரவோடி வாங்கி வாசிபது மகிழ்ச்சியளிக்கிறது.
6. இளம் எழுத்தாளர்களுக்கு ஆதர்ச மூத்த எழுத்தாளராக திகழ்கிறீர்கள். இளம் எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் வெளி வரும்போது , முன்னின்று வெளியீட்டு விழாக்களில் கலந்து , விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள். இன்றைய எழுத்துக்கள் பற்றி..
ஶ்ரீராம் : புதிய எழுத்தாளர்களின் முயற்சிகளை வாசித்து, வாசகர் உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதால், வாசகர்களுக்கு எழுத்தாளர்களின் உலகில் எளிதில் செல்ல உதவும். புதிய முயற்சிகளை பகுப்பாய்வு செய்வதில் எனக்கும் ஈடுபாடு உண்டு.
7. அனைத்து புது முயற்சிகளையும் ஆதரிக்கிறீர்களா?
ஶ்ரீராம் : புது முயற்சிகளை வரவேற்கிறேன். முன்னின்று அதன் கூறுகளை விவாதிகிறேன், ஊக்கப்படுத்துகிறேன். ஆனால், குறைகளை சுட்டிக்காட்ட தவறுவதில்லை.
8. உங்கள் சிறுகதைகள் மற்றும் நாவல்களில், விளிம்பு நிலை மனிதர்கள் , வாழ்வின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை பிடியை பிடித்து வாழ்கிறார்கள். அவர்களை பற்றி...
ஶ்ரீராம் : அதற்கு காரணம், நான் பார்த்து வாழ்ந்த கிராம மக்களும், அவர்களது வாழ்வியலுமே காரணம். தற்போதைய சென்னை நகர் வாழ்வில் கூட, ஏதோ ஒரு நிகழ்வை , சம்பவத்தை நான் கடக்கும் போது, அதில் இருக்கும் பாத்திரங்களை நேரில் அணுகி, பேசி அவர்களை புரிய முயற்சிக்கிறேன். இதுவே எனது பாத்திரங்களின் வழியாக எழுத்து நிகழ்கிறது.
9. தீவிர இலக்கிய வாசிப்பில் இருப்பவர்களை நீங்கள் எழுத ஊக்கப்படுத்தவற்கான காரணம்?
ஶ்ரீராம் : ஒவ்வொரு இலக்கிய வாசகனும், அவனுக்கான ஒரு புத்தகத்தை வாசிப்பில் அடையும்போது , அவனை அந்த புத்தகம் எழுத தூண்டும். அங்கிருந்து, வாசகர் எழுத்தாளராக மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இன்றைய இளைஞர்கள், அவர்களது வாழ்வனுபவங்களை எழுதி பார்க்கவேண்டும், அதில் இருந்து கதைகளை விரிக்க முயற்சிக்கலாம். ஒரு சக படைப்பாளியாக மாறுவதற்கான தகுதி, நல்ல இலக்கிய வாசகனுக்கு உண்டு.
10. உங்கள் இளம் வயதில், எழுத்தாளர்களை நேரில் தேடி சந்தித்த அனுபவங்கள் பற்றி...
ஶ்ரீராம் : அது எங்கள் காலகட்டத்தின் பரவசம் கொடுக்கக்கூடிய இலக்கிய அனுபவம். இன்று சமகாலத்தில் உள்ள பெரும்பாலான மூத்த எழுத்தாளர்களை, அவர்களது வீட்டிற்கு சென்று சந்தித்து , உரையாடி கிடைக்க பெற்ற அனுபவங்கள் இன்றும் நினைவில் உள்ளது. இன்றைய இலக்கிய உலகில், அது தொழில்நுட்ப வாயிலாக எளிதாக விட்டது. இருந்தும், நேரில் பேசி உரையாடுவதில் , கற்றல் அனுபவங்கள் அதிகம்.
11. தீவிர வாசிப்பில் உள்ளவர்கள், இலக்கிய கோட்பாடுகளை தாங்கள் படிக்கும் நூல்களில் எவ்வாறு வரையறுத்து கொள்வது?
ஶ்ரீராம் : இளைஞர்களுடன் உரையாடும் போது, இது சார்ந்த கேள்விகள், வெவ்வேறு வடிவில் எழும். இதற்கு வாயிலாக, நான் பரிந்துரைக்கும் நூல் ' இஸங்கள் ஆயிரம் - எம்.ஜி. சுரேஷ் (ஆசிரியர்)' . இதில் அனைத்து இஸங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு வாசகர் இதை படிக்கையில், அவர்களால் படைப்பிலக்கியங்களின் கோட்பாடுகளை வகுத்து எளிதாக ஆசிரியன் நோக்கங்களை அறிந்து கொள்ளமுடியும்.
12. கடும் உழைப்பு கோரும் தொலைக்காட்சி ஊடக துறையில் இருந்து கொண்டு, தொடர்ந்து எழுதுவது எவ்வாறு சாத்தியபடுகிறது?
ஶ்ரீராம் : ஊடக உலகம் , மற்ற துறைகளை விட, சற்று சுதந்திரமானது எனவே கூறுவேன். இன்றைய நவீன உலகில், எழுத்தை தாண்டி பிரதான வேலை தவிர்க்க இயலாதது. தினம் எழுத முயற்சிக்கிறேன், குடும்பமும் தொடர்ந்து எழுத பக்கபலமாக உள்ளது.
13. உங்கள் வாசிப்பு பற்றி - கவிதை, நாவல், கட்டுரைகள் என..
ஶ்ரீராம் : எந்தவொரு இலக்கிய வாசகன் போலவும், நிறைய புத்தகங்களை ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துவிடுவேன் . இந்த வருடம் படிக்கவேண்டுபவை என, புத்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து , அடுக்கி வைப்பது உண்டு.
தொடர்ந்து, இதழ்களில் கவிதைகள் வாசிக்க தவறுவதில்லை. என்னை கற்றலுக்கு பரவசப்படுத்தும் கட்டுரை தொகுப்புகளை தேடி படிப்பேன், அவை எனது கதைகளுக்கும் தகவல் களஞ்சியமாக உள்ளது. சமீபமாக, கலை பொருட்களை பராமரிப்பது , பாதுகாப்பது பற்றிய நேஷனல் புக் டிரஸ்டின் கட்டுரை தொகுதி ஒன்றை வாசித்து வருகிறேன்.
14. வாசகர்களை சந்தித்து உரையாடும்போது, என்ன புத்தகம் வாசிக்கிறார்கள் என பொறுமையாக கேட்டு அறிவதற்கான காரணம்?
ஶ்ரீராம் : இன்றைய உலகில் உள்ள நேர நெருக்கடியில், நல்ல புத்தங்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். இல்லையெனில், இலக்கியமற்ற மேலோட்டமான புத்தகங்களில் வாசிப்பு நின்றுவிடும். இன்று சமூக தளங்களில் ஏதாவது எழுதிவிட்டு, தன்னை எழுத்தாளர் என கூறி வாசகர்களை திசைதிருப்பிடுகிறார்கள்.
ஆகையால், வாசகர்கள் நல்ல இலக்கிய படைப்பை நோக்கி செல்லவேண்டும்.
நேரம் அளித்து உரையாடிய N. ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
- கவின்.


Comments
Post a Comment