மாயதீதம் விமர்சனம்
100 பக்க குறுநாவல்.
ஆசிரியர் - N. ஶ்ரீராம்
"கோட்டை மாரியம்மன் - எனது சொந்த ஊர் சேலம், கோட்டை மாரியம்மன் பிரசித்தி பெற்றது. சேர மன்னர்கள் ஒரு கோட்டையை எழுப்பி, அதில் வைத்து வழிபட்ட அம்மனே கோட்டைமாரியம்மனாக மருவியது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன் கோவிலுக்கு இது தலைமை. இன்னும் கோட்டைமேடு என்னும் பெயரில் சேலத்தில் பகுதி உள்ளது. பால்யத்தில் கோட்டை மாரியம்மன் திருவிழா என்றால் ஊரே அமர்க்களம் மற்றும் பய பக்தி காற்றினில் பரவும் "
சேலம் கோட்டை மாரியம்மன்
---
நாவலின் தொடக்கத்தில், கோட்டை மாரியம்மன் தனது விஸ்வரூப குதிரையில் காவு வாங்க துரத்துகிறது. அது ஏன் துரத்துகிறது, கதை நாயகனுக்கும் கோட்டை மாரியமனுக்கும் என்ன தொடர்பு என்பதே நாவலின் மையம்.
ஒரு குடும்பத்தில் வம்சாவளியாக வரும் நோய், சாபம் தீர்க்க என்ன வழி? நம்பிக்கை மட்டுமே.. பல்வேறு அம்மன்கள், பல்வேறு ஊர்களில், பலவாறு நம்பிக்கைகள். இந்த நம்பிக்கையை , கிராம மக்களின் வாயிலாக ஶ்ரீராம் அவர்கள் விறு விறு என கதையை நகர்த்துகிறார்.
பல மருத்துவர்கள் கைவிட்ட சிறுவனின் தீரா கண் நோயை குணமாக அவனின் சித்தப்பா , அம்மனை தினமும் வழிபட்டு அமுத பாத்திரம் ஏந்தி வேண்டுகிறார். அம்மனிடம் உரிமையுடன் நோயை குணமாக உத்தரவிடுகிறார். அங்கு பல்வேறு படிமங்கள், குறியீடுகள், தெய்வீக மனிதர்கள், இயற்கை வழிபாடுகள் வழியாக கண் நோய் சிறுவனுக்கு குணமாகிறது. நாவலில் இந்த பகுதி , ஶ்ரீராம் அழகியலுடன் கோர்த்து வாசகரை கட்டி போடுகிறார். (இது சற்று சினிமா தனமாக இருந்தாலும், இது உண்மையே)
அந்த சிறுவன், அங்கிருந்து வாழ்க்கை முழுக்க அப்பாற்பட்ட சக்தி துரத்திக்கொண்டே இருக்கிறது. சித்தப்பா சித்தியிடம் வளர்ந்து ஆளாகிறான், அவர்களுக்கு ஒரு பையன் , மன நலம் குன்றியவன். கதை நாயகன் ஓவியராக மாறி, ஒரு பாறையில் மகாபாரத ஓவியம் தீருகிறான், மீண்டும் ஒரு தெய்வ சக்தியை சந்திக்கிறான்.
அவன் வாழ்க்கையில் கீழே விழும்போதெல்லாம் , சித்தப்பா கை கொடுக்கிறார். கோட்டை மாரியமானால் ஆசீர்வதிக்கப்பட்டவன். இவ்வளவு இருந்தும், ஒரு பெண்ணின் உறவு ஏற்பட்டு, மன சிக்கலில் மாறி அல்லாடுகிறான். அவனே ஒரு தேசந்திரியாக மாறி, வீட்டிற்கும் நாட்டிற்கும் அலைகிறான். மீண்டும் ஒருமுறை கோட்டை மாரியம்மன் தனது விஸ்வரூப குதிரையில் வருகிறாள். நாம் நம்பும் தெய்வ சக்தி ஆசீர்வதிக்க மட்டும் தான் செய்யுமா என்ன? தண்டிக்கவும், கண்டிக்கவும் உரிமை உள்ள கடவுள்களே, நாட்டார் மற்றும் மண் சார்ந்த தெய்வங்கள்.
இது கண்டிப்பாக பெருநாவலாக தகுதியுடையது. சுருக்கியமையால் சில இடங்களில் பெரிய இடைவெளி வருகிறது. ஆயினும், வாசிக்கப்படவேண்டிய புத்தகம், ஒரு புது அனுபவத்திற்காக.
- கவின்



Comments
Post a Comment